சாயல்கள்...!
எனக்கும் உனக்கும்
ஏறக்குறைய
ஒரே வயதிருந்தாலும்
நிறம் குணம்
இன்னபிற இத்தியாதிகள்
இருவேறு துருவங்களாய்
ஒத்திருக்கவில்லை.
என்றோ மரித்த
என் தாத்தாவின் சாயல்
ஒத்துப் போகிறதாம்
எனக்கு.
என்னைச் சார்ந்த வேறுயாரும்
இதுகுறித்து
என்னிடம் பேசியதில்லை.
தாத்தாவோடு
வாழ்ந்து முடித்த
எங்கள் பொக்கைவாய்ப் பாட்டி
அவள் நினைவுச் சாறினைப்
பிழியப்பிழியச் சொல்லித்தான்
இதை
நானும் தெரிந்து கொண்டேன்.
எங்கள் யாரிடத்திலும்
பாட்டியின் சாயல்
ஒத்துப்போகாமலிருக்கிறது.
ஒருவேளை
எங்களின் பிள்ளைகளுக்கு
ஒத்துப்போகலாம்
எங்கள் பாட்டியின் சாயலோ
எங்கள் அப்பாவின் சாயலோ...
எதுவும்
ஒத்துப்போனாலும்
ஒத்துப்போகாமல் போனாலும்
அந்தந்த பாத்திரங்களுக்குள்
முழுமையாய்த் திணித்துக்கொண்டு
அவரவர் சாயல்களில்
வாழ்வதே
வாழ்வென்றாகிவிட்டது
நமக்கு.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.