சினம் கொள்!
ஆறுவது சினம் என்றார்
அறுந்தமிழ் ஔவையுமே
ரௌத்திரம் பழகு என்றார்
பாட்டுப் பாட்டன் பாரதியும்
கொள்ளும் சினம் நல்லதென்றால்
ஔவையும் பாரதி வழி ஏற்பாள்.
இயற்கை வளத்தைச் சுண்டிய
எத்தரிடம் சினம் கொள்
காட்டை அழித்து வீடாக்கிய
கயவர்களிடம் சினம் கொள்
சமயத்தை மதமாக்கிய
மதவெறியரிடம் சினம்கொள்.
கல்வியைக் கடைச் சரக்காக்கிய
கல்விக் கொள்ளையரிடம் சினம் கொள்
தாய்ப்பாலையும் நஞ்சாக்கிய
கலப்படக்காரரிடம் சினம் கொள்
உயிர் காக்கும் மருத்துவத்தை
விலையாக்கிய வீணர்களிடம் சினம் கொள்.
மனிதனை மிருகமாக்கிய
சாதி வெறியனிடம் சினம் கொள்
வாழ்வதே சுமையென்றாக்கிய
அரசியல் வியாபரியிடம் சினம் கொள்
நீ கொள்ளும் சினம் நல்லதென்றால்
நீ நிலைத்திருப்பாய் மக்களிடம் !
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.