தீண்டாமை தீயணைத்த தீரன்
மாண்பான மகாராட்ர மாநி லத்தின்
மண்ணிலுள்ள வாசிம்வட்ட கலாம்பேட் ஊரில்
வேண்டாத சாதியினைக் கையில் தூக்கி
வெட்டுகின்றார் மனிதத்தை இன்னு மங்கே
தோண்டிவைத்த கிணற்றினிலே நீரெ டுக்கத்
தொலையாத மேல்சாதி ஆண வத்தால்
மாண்டதாக நினைத்தவெறி மீண்டெ ழுந்தே
மறுத்திட்டார் கீழ்ச்சாதி என்ப தாலே !
கிணற்றினிலே நீரெடுக்கத் தடுத்த தாலே
கிளர்ந்தெழுந்த தன்மான உணர்வி னாலே
பிணமல்ல அவமானம் தாங்க வென்றே
பிறந்திட்ட சினத்தாலே தனிய னாக
உணவிற்காய் கூலிவேலை செய்து கொண்டே
உரிமைக்காய்க் கிடைத்திட்ட ஓய்வு தன்னில்
தினம்காலை மாலையெனத் தன்நி லத்தில்
திண்தோளால் கிணறுதனை வெட்ட லானான் !
சீற்றமுடன் மனம்தளர்ந்து போயி டாமல்
சிரித்தவர்கள் தலைகுனிய பாபுராவ் தாட்ச்னி
நாற்பதுநாள் கடுமையான உழைப்பை ஈந்து
நன்னீரைத் தருகின்ற கிணறு தோண்டி
ஊர்மக்கள் யார்வந்தும் எடுத்துச் செல்ல
உளம்நிறைந்த மகிழ்ச்சியுடன் அழைப்பைத் தந்தே
நீர்தன்னில் தீயணைத்தல் போல்அந் நீரால்
நின்றெரிந்த தீண்டாமை தீய ணைத்தான் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.