உடையும் பலூன்...
இலாபக்கணக்கு வைத்தே
பொருட்களை
மொத்தமாய் வாங்குகிறார்கள்
எல்லா வியாபாரிகளும்.
என் எதிரிலிருக்கும் பலூன்காரனும்
இப்படி
இலாபக்கணக்கு வைத்துத்தான்
வண்ணமயமான பலூன்களை
மொத்தமாய் வாங்கியிருக்கக் கூடும்.
அவன் வாங்கிய பலூன்களில்
சிதிலமடைந்திருக்கும் பலூன்களை
ஒரு வியாபாரியாய்
அதை நட்டக் கணக்கில்தான்
கொண்டாக வேண்டும்.
ஒரு எல்லைவரை
உப்பி விரிவடையும் பலூன்கள்.
காற்று சற்றே அதிகரிக்க
உடைந்து வீணாகும்.
ஊதும் நேர்த்தியை
அவன் நேர்த்தியுடன் கையாள
ஆரம்பத்தில் நிறைய பலூன்கள்
உடைபட்டிருக்கும்.
ஆசையோடு
பலூன்களை வாங்கும் குழந்தைகள்
அதனுடன் களித்து விளையாடி
மகிழ்ச்சியுற்ற பின் அவை உடைய
வருத்தமடைவதில்லை
குழந்தையின் மனம்.
வாங்கிய பலூன்
சில நிமிடங்களில் உடையும்
தருணத்தில் தான்
குழந்தையின் நேசமனமும்
அதன் ஆசை
நேர்க்கோட்டிலிருந்து விலகி
பலூனைப் போலவே பட்டென உடைகிறது.
அப்போதைய
குழந்தையின் பரிதாபமனமும்
சிதிலமற்ற பலூன்
ஊதும் நேர்த்தியற்று ஊத
உடைந்து வீணாகும்
பலூன்காரனின் தளர்ந்தமனமும்
ஒன்றாய் இருக்குமேயன்றி
வேறாய் இருக்க வழியில்லை.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.