தீப்பொறி!
எனக்குள் அழுத நாட்களை
வெறுத்து ஒதுக்குகிறேன்
ஏனழுதேன்?
ஏமாற்றமா?
ஏக்கமா?
எதிர்பார்ப்பா?
எண்ணற்ற கேள்விகள்
என்னையே கேட்கின்றேன்
எதற்கு
எப்படிப்
பதிலளிப்பேன்?
யாருக்காகவும்
அசையாத கிளை
அழகான பறவையின்
பாரத்துக்கு
அசைந்ததுபோல
அசைந்த மனதில்
ஆயிரம் போராட்டங்கள்
அடுக்கடுக்காய்
சுமந்தாலும்
ஆண்மகனாய்
அடையாளமிட்ட
அவனுக்காய் அழுதேன்
அவனையும் ஆணென
நினைத்து
ஆனந்தத்தில் அழுதேன்
ஆனால் அவனும்
சாதாரண
உடல் தேவைக்குப்
பெண்ணைத் தேடும்
ஆணென அறிந்த போது
நான் நிமிர்ந்தேன்
வெறித்துப் பார்த்த போது
தெறித்த பொறி
வழிந்த கண்ணீரை
காய வைத்தது.!
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.