கவிதைக்காரனின் கவிதை!

எல்லோரும்
இதயத்தை இலகுவாக்கியபடி
வாருங்கள்
.
உங்களின்
கோபங்களையும் குரோதங்களையும்
களைந்து வருவதே
என்னைப் போல்
என் கவிதைக்கும் பிடிக்கும்.
பரிவாரப் படைகளோடு
யாரும் வரவேண்டாம்.
தனித்தே வாருங்கள்.
உங்களுக்குப்
பரிவட்டம் சூட்டி அழகு பார்க்கும்
பாங்குமிகு
பாசக்கவிதை எனது.
மென்மனதுக்காரர்கள்
தம் மனங்களை
மேலும்
மென்மையாக்கிக் கொள்ளலாம்.
இதயத்தில் புது ரத்தம்
இதமாய்ப் பாய்ந்திடும்.
உங்கள் முகத்தில்
வசீகரப் பூக்கள்
பூத்துக் குலுங்கிடும்.
கவலைகள் எல்லாம்
காணாமல் போகும்.
கனவுகள்
அருவியாய் ஊற்றெடுக்கும்.
சொர்க்கவாசல்
உங்களுக்கெனத் திறந்திருப்பதை
நீங்கள்
நிச்சயம் உணர்வீர்கள்.
இது முற்றிலும் உண்மை
என் கவிதை அன்பர்களே!
பூக்கள் வெடிக்கும்
சப்தத்தை
இதுநாள் வரைக் கேட்டறியா
மனிதர் தானே நாமெல்லாம்.
முதன்முறையாய் அதை
என் கவிதையின் நிறைவில்
மகிழ்வாய்க் கேட்டுணரலாம்.
உங்களின்
மனம் முழுக்க உடுக்குகள்
மினுக்கும் மின்மினிகள்
வட்டமிட்டுப் பறந்திடும்.
வண்ணத் திரையுடுத்திய
வண்ணத்துப் பூச்சிகள்
வண்ணமழைத் தூவிடும்.
மழைக்கால
வானவில்லை இருகரங்களால்
இறுக அணைத்திருப்பீர்கள்.
இவையனைத்தையும்
இப்போதே இந்தக் கவிதையில்
உங்களின்
வசமாக்கிக் கொள்ளுங்கள்.
என் கவிதை அன்பர்களே!
மீண்டுமொருமுறை
கனிவோடு
என் கோரிக்கையினை
முன்மொழிந்து
உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
எல்லோரும்
இதயத்தை இலகுவாக்கியபடி
வாருங்கள்.
இறக்கைகளின்றி ஆகாயத்தில்
பஞ்சாய்ப் பறந்திடும்
அதிசயத்தை அனுபவித்தே
மகிழ்ந்திடுங்கள்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.