வீணாக்காதே...!
என்ன நடக்கிறது
எம்மைச் சுற்றி?
சாதிச் சண்டை, மதச் சண்டை
கட்சிச் சண்டை, காதல் சண்டை
எதற்குமே
தீர்வற்ற தேசத்தில்
காவிரிச் சண்டை வேறு...!
கண்கள்
கண்ணீரை நிரப்புகிறது!
ஒரே நாட்டில்
ஒற்றுமையற்ற
ஓராயிரம் இனப்பெயர்கள்
ஒய்யாரமாக
ஊழலையும் ஊறுகளையும்
உண்மையற்ற அரசியல்
விதைத்து விட
பாவப்பட்ட அப்பாவிகள்
பரிதாபமாக பசிப்பிணியில்
எரிவது தான் காண்கிறோம்!
வேஷமிட்ட அரசியலில்
வடிகட்டிய முட்டாள்களாகத்
தீ மூட்டியே
அழிந்து செல்வது
ஆறாத துயரம்.
வயிற்றிலெரியும்
எண்ணற்ற உந்தன்
இனத்தின் பசித்தீயை
இனியேனும்
கண்திறந்து பார்த்திடு!
காலத்தின் ஒளியான
இளைஞனே!
விழியிருந்தும் குருடராய்
வெட்டி நியாயம் சொல்லும்
வீணர்க்காய் வீணாக்காதே
விண்ணைத் தாண்டிய
விடியலை...
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.