வேண்டுதலும்...! வேண்டுகோளும்...!!
பூவனத்தில்
என்னுடன் பூப்பறிக்கிறது
பிஞ்சுவிரல் கரமொன்று.
எவ்வளவு நேர்த்தியுடன்
பூப்பறித்தும்
அப்பிஞ்சுவிரல்களின்
மென்மைக்கு இணையாய்
பூப்பறிக்க இயலவில்லை என்னால்...
தென்றலாய்த் தவழ்ந்து வந்த
இன்னொரு கரமொன்று
அதனினும்
இன்னும் மென்மையாய்ப்
பறிக்கிறது பூக்களை...
என் கரங்களும்
பிஞ்சுவிரல்களைக் கொண்டிருந்த
காலங்களில் மென்மையாக
அதனினும்
இன்னும் மென்மையாய்த்தான்
தென்றலாய்ப்
பூக்களைப் பறித்திருக்கும்...
மெல்ல மெல்ல
இந்த அவசரமும், பரபரப்பும்
பிரம்மாண்டமாய் விரிந்து
என் விரல்களில் புகுந்தது மட்டுமே
இறுதியாக இருக்கட்டும்...
இனிவரும் காலம்
எந்த விரல்களிலும்
இவை புகுந்திடக் கூடாதென்பதே
இப்போதைய
வேண்டுதலும் வேண்டுகோளுமாய்
இருக்கிறது.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.