கொண்டாடுவோம்!
வெடிக்கின்ற வெடியாலே பயன்தான் உண்டோ
வெறும்சத்தம் கேடுதனைக் காதில் செய்யும்
வெடிக்கின்ற போதுவரும் புகையின் நஞ்சு
வெளிவானின் காற்றினிலே மாசைச் சேர்க்கும்
கடிதாக மூக்கிற்குள் நுழைந்து சென்று
கட்டுடலின் இதயத்தில் அடைப்பைச் செய்யும்
குடியிருக்கும் குடிசைகளை எரியச் செய்யும்
குழந்தைகளின் உடலில்தீப் புண்ணைச் செய்யும் !
பட்டாசு தொழிற்சாலை பலரின் வாழ்வைப்
பரிதாப நிலைக்காக்கி உயிரைப் போக்கும்
சிட்டாகப் பறக்கின்ற சிறுவர் கல்வி
சிதறடித்தே ஏழ்மையினைப் பணமாய் ஆக்கும்
விட்டிற்போல் மக்களினை வீழச் செய்து
வீணாகக் காசுதனைக் கரியாய் ஆக்கும்
பட்டாடை பளபளப்பு பட்டுப் பூச்சி
பாடையிலே வருதல்போல் வருமிவ் வின்பம் !
தித்திக்கும் இனிப்பாக நெஞ்சம் கொள்வோம்
தீபத்தின் ஒளியாக ஊருக் குழைப்போம்
புத்தாடை ஏழையர்க்கே தைத்த ளிப்போம்
புதுச்சுவையின் உணவுதனை இல்லார்க் கீவோம்
மத்தாப்பூ சிரிப்புதனை அவரில் காண்போம்
மகிழ்ச்சிதனைப் பிறரோடு பகிர்ந்து கொள்வோம்
சித்தத்தில் தீமைக்கே வேட்டு வைத்து
சித்தரிப்போம் பொதுவிழாவாய் மதங்கள் விட்டே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.