என் பயணம்
என்னை கையோடு
அழைத்துப்போக வந்தவன்
வாசலில் நின்று கொண்டிருக்கிறான்.
என் பணிகள்
இன்னபிற பங்களிப்புகள்
குறித்து
அவனிடம் எடுத்துரைக்கிறேன்.
எதையும்
அவன் காதில் வாங்காதவனாய்
இருக்கிறான்.
இத்தனை நாள்
நான் பெரும் பட்டினியால்
கிடப்பதைச் சொல்கிறேன்.
இனியும்
பட்டினி கிடக்க
உன்னால் ஆகாதென்கிறான்.
மீண்டும்
என்னால் திரும்பலாகாதென்று
நான் சுற்றியிருப்பவர்
எல்லோரையும்
ஏக்கம் ததும்பப் பார்க்கிறேன்.
மொத்தப் பார்வையும்
எனக்கு
விடை கொடுப்பதாகவே
இருக்கிறது.
வாசலில் நின்றிருப்பவனோ
தயாராய் இருக்கிறான்.
நான் அவனுடன் புறப்படுகிறேன்.
இதோ... போகிறேன்
என்னைச் சுற்றியிருந்த
எல்லோரும் பூரிக்கிறார்கள்
பூரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.