கயவரினை விரட்ட வாரீர்

தமிழென்றால் கவிதைகளே கண்முன் நிற்கும்
தரணியெல்லாம் போற்றுகின்ற இலக்கி யங்கள்
அமிழ்தானக் காப்பியங்கள் இலக்க ணங்கள்
அத்தனையும் கவிதையிலே மிளிரக் கண்டோம்
தமிழ்மன்னர் அனைவருமே தமிழைத் தம்மின்
தாயாக வணங்கியன்று போற்றிக் காத்தார்
தமிழ்க்கவிஞர் அனைவருக்கும் மதிப்ப ளித்துத்
தகுமுறையில் அவர்தம்மைப் பேணிக் காத்தார் !
தமிழுக்காய்த் தம்முயிரைத் தந்த மன்னன்
தன்தலையைத் தந்தமன்னன் ஆட்சி தம்மை
தமிழுக்காய்த் துறந்தமன்னன் அரும ருந்தாய்
தம்கைக்குக் கிடைத்தநெல்லிக் கனியை சாவா
தமிழுக்காய் அளித்தமன்னன் முரசுக் கட்டில்
தனில்படுத்தே உறங்கிட்ட புலவர் தம்மை
தமிழாலே காத்திட்ட மன்னன் என்றே
தமிழ்க்கவிஞர் தமைப்போற்றிப் புரந்த நாடு !
அக்காலம் முதற்கொண்டு நாட்டை ஆளும்
அரசரெல்லாம் செம்மையாக ஆட்சி செய்ய
தக்கவுரை கூறுகின்ற கவிஞர் தம்மைத்
தம்மருகில் வைத்திருந்தார் அமைச்சர் போன்றே
பக்கத்தில் இருந்தபடி மக்கள் நெஞ்சை
பாட்டாலே எடுத்துரைத்துப் பெருமை சேர்க்கும்
பக்குவத்தால் அரசவையின் கவிஞ ரென்றே
பட்டமுடன் சிறப்பளித்தார் மன்னர் அன்று !
ஆட்சியின்று மக்கள்கை வந்த பின்பு
அறிஞர்க்கும் கவிஞர்க்கும் மதிப்பே இல்லை
மாட்சியில்லா ஆட்சியரைப் புகழ்ந்து பாடும்
மானமில்லாக் கவிஞருக்கே பரிசும் விருதும்
வேட்டிசேலை மறைந்ததுபோல் யாப்பே இல்லா
வெற்றுச்சொல் புலம்பல்தாம் கவிதை யின்று
காட்சிதரும் வேசியராய்த் தமிழை விற்கும்
கயவரினை விரட்டிதமிழ் காப்போம் வாரீர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.