சிந்திப்பீர்!
வீட்டினிலே ஆயிரமாய் தெய்வம் வைத்து
விளங்குகின்ற வழிபாடு செய்வாய் நன்று
காட்டுகின்ற மதச்சின்னம் மேனி மீதில்
கண்காண அணிவதிலே தவறு மில்லை
கூட்டைவிட்டு வீதியிலே நடக்கும் போதோ
கூறுகின்ற இந்தியனாய் இருந்தால் அன்றோ
நாட்டிளையே ஒன்றிணைக்கும் மனித நேயம்
நல்லன்பால் முகிழுமிங்கே ! சிந்திப் பீரே !
மனத்திற்குள் தெய்வத்தை நினைப்ப தற்கும்
மதக்கருத்தில் திளைப்பதற்கும் தடையோ இல்லை
கனலிங்கே அடுப்பிற்குள் இருக்கும் போது
கவலையில்லை வெளிவந்தால் என்ன வாகும்
மனத்திற்குள் இருக்கின்ற கருத்தை வீதி
மன்றத்தில் பிறர்மீது திணிக்கும் போதே
புனல்நாட்டில் புயல்வீசும் மனித நேயம்
புதைக்குழிக்குள் போய்மடியும் சிந்திப் பீரே !
மதவெறியோ மானுடத்தைச் சாய்க்கும் ! அன்பு
மனமிருந்தால் மனிதநேயம் தழைக்கும் ! இங்கு
மதவெறியோ ஒற்றுமையைக் குலைக்கும் ! அன்பு
மனமிருந்தால் வேற்றுமையைத் தகர்க்கும் ! நம்மின்
மதமெல்லாம் வீட்டிற்குள் வைப்போம் ! நாடு
மணப்பதற்கு மனங்களினை இணைப்போம் ! ஆட்சி
பதர்களுக்குப் பலியாகி வீழ்ந்தி டாமல்
பாரதத்தை உயர்த்துதற்கே சிந்திப் பீரே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.