வறுமைக் கோடு
உழைக்காமல் இருந்தாலோ வறுமைக் கோடு
உருவாகி நாடுதனைக் குழியுள் தள்ளும்
அழைப்புதனை யார்தருவார் உழைப்ப தற்கே
அனைவருமே தானாய்முன் வருதல் வேண்டும் !
தழைத்திருக்கும் வளம்கூட கரைந்து போகும்
தானமர்ந்து நாளெல்லாம் உண்ணும் போது
உழைக்காமல் உண்பதுவோ பிறரு ழைப்பை
உரிமையின்றித் திருடுதற்கே ஒப்பா யாகும் !
உழைக்காமல் உழைப்புதனைச் சுருட்டு கின்ற
உன்மத்தர் உல்லாச மாக வாழ
உழைத்துழைத்தே ஓடாகத் தேயு கின்ற
உழைப்பாளர் நிற்கின்றார் வறுமைக் கோட்டில் !
பிழைப்பதற்கு மூட்டையினைத் தூக்கு வோர்கள்
பிள்ளையொடு கல்மண்ணைச் சுமப்ப வர்கள்
குழைந்தசேற்றில் நெல்விளைக்கும் உழவ ரெல்லாம்
குற்றுயிராய்ப் பசியோடு வாடு கின்றார் !
நிலமோடு நீர்நிலைகள் நிறைந்தி ருந்தும்
நிகரற்ற இளைஞர்தம் தோளி ருந்தும்
நலமான மனங்களின்றித் தன்ன லத்தால்
நாடாள்வோர் கயவராக இருப்ப தாலே
சிலரிங்கே வளங்களினைத் திருடிக் கொண்டு
சித்தரித்தார் செயற்கையாக வறுமை தன்னை
பலருமிங்கே விழித்தெழுந்தால் வறுமைக் கோடு
பசியெல்லாம் தகர்ந்துபோகும் பொதுமை பூத்தே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.