தீர்மானித்தல்
சுலபமாய்க் கேள்விக்குள்
நுழைந்து கொண்டு
மறுபடியும் பதிலுக்குள்
என்னைத் திணிக்கப் பார்க்கிறாய்.
கரைபுரண்டோடும் காட்டாறு வெள்ளத்தை
மடைபோட்டுத் தடுப்பது
அவ்வளவு சுலபமில்லை.
கிணற்று நீரை
அள்ளி ஊற்றிய பிறகும்
அடிசுரக்கும் ஊற்றுநீரில் தலைகாட்டும் ஆகாயம்.
சூடு சுமந்த மூங்கிலை
ராகம் தெரியாதவன் வாசிக்க யாதொரு பயனுமில்லை.
நின்று கொண்டிருப்பவனுக்குத் தெரியாது
அமர்ந்து கொண்டிருப்பவனின் அவதி
முள்ளைக் குத்திக் கொண்டவனுக்கு
வலியும் வேதனையும் இருக்கத்தான் செய்யும்.
அவன் முள்ளை வசைபாடுவது
எவ்விதத்தில் நியாயம்...?
எப்போதேனும்
பொங்கி வரலாம் கேள்விகள்.
உனக்கான மழைப் பொழியும் போது
எனக்கான தூறல் விழாமலா போகும்.
பதிலைப் பிடித்துக் கேள்வி கேட்கப் பழகு.
எனக்குத் தெரியாத பதிலையும்
நீ உரைத்துப் பழகு.
சகமனிதனோடு மனிதனாய்
சேர்க்க மாட்டேன் உன்னை.
நீ திறமைசாலியென்று
அப்போது நான் பறைச்சாற்றுகிறேன்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.