இளமைக் காலம்
கள்ளமில்லாச் சிறுபருவம் அன்பை மட்டும்
காட்டிட்ட அரும்பருவம் சிரிப்பைச் சிந்தி
உள்ளமெல்லாம் இன்பமாக ஓடி யாடி
உண்மையாக மகிழ்ந்திருந்த பள்ளிக் காலம்
எள்ளளவும் கபடின்றிப் பொய்யாப் பேசி
ஏமாற்றும் தந்திரங்கள் இல்லாக் காலம்
கிள்ளிவிட்டுக் கோபத்தைக் காட்டி னாலும்
கிளர்ச்சியுடன் அடுத்தநொடி சேர்ந்த காலம் !
அரைக்காலின் சட்டையுடன் அடுத்த வீட்டு
அன்னமுடன் கைகோர்த்து நடந்த காலம்
சுரைக்காயின் பந்தல்கீழ் அண்டை வீட்டுச்
சுமதியுடன் கதைபேசி இருந்த காலம்
தரையமர்ந்து பக்கத்து வீட்டுப் பாலு
தந்திட்ட கமர்கட்டைக் கடித்த காலம்
அரைகுறையாய் வீட்டுப்பாடம் எழுதி டாமல்
ஆசிரியர் குட்டதலை குனிந்த காலம் !
பொன்வண்டைத் தீப்பெட்டிக் குள்ளே போட்டு
பொலிகின்ற மயிலிறகை நூலுள் வைத்து
தின்றநுங்கை வண்டியாக தெருவில் உருட்டி
திருட்டாக மாங்காயைப் பறித்துத் தின்று
நன்றாக கரணமிட்டே ஆற்றில் நீந்தி
நடைபோட்டு வயல்வரப்பில் சுற்றி வந்த
துன்பங்கள் அறியாத அந்தக் காலம்
தூய்மையான வசந்தகாலம் இளமைக் காலம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.