இருசெவிகள் போதாது!
விடியலுக்கு முன்னால்
இரவின்
மடியில் மலர்ந்த
உறக்கத்தில் உதித்த
பெருங்கனவொன்றின்
கதையொன்றிருக்கிறது.
இன்னும்
என்னறைச் சுவர்களின்
சிலந்தி வலைகளில்
அது
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.
அதை உன்னிடம்
சொல்ல எத்தனித்து
என் மீதே நான் நடந்து வரும்
தருணத்தில் தான்
நீ சிடு சிடுவென
கோபமாய்க் காணப்படுகிறாய்.
அதைப்
பெரும்போக்காய்
என்னால் சொல்லலாகாது.
ஆரம்பத்தில் இருந்து
இறுதி வரைக்கும்
துளியும் பிசகாமல்
நான் சொல்வதிலும்
நீ கேட்பதிலும் தான்
சுவை நிரம்பியிருக்கிறது.
அவை
அம்புகளாய்த் தைத்து
ஆழமாய்ப் புதைந்து
உன் ஆகப்பெரும் துயரத்தைத்
துடைத்து
ஆட்சிப்பீடம் நிகழ்த்தும்.
அதற்கு
இரு செவிகள் போதாது
தேகமெங்கும்
செவியோடு வா...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.