மாறாத ஆண்டுகள்...
ஆண்டுகள்
ஒவ்வொன்றும்
ஓராயிரம்
நிகழ்வைத்தூக்கி
ஒய்யாரமாய்
நகர்கிறது.
நத்தையாக
நகர்வதென்றும்
நலிந்தமக்களின்
எதிர்பார்ப்புகள்
மட்டுமே!
இன்றுமாறும்
நாளைமாறுமென்ற
நம்பிக்கை
தேய்ந்து
இந்த ஆண்டு
மாறும்
இனிப்பிறக்கும் ஆண்டு
மாறுமென்ற
மனோநிலையை
மண்ணைநம்பியே
வாழும்
பாட்டாளி மக்களின்
எதிர்பார்ப்பாக
மாற்றிவிட்டதென்பது
வளர்ச்சியின்
உச்சநிலையே
ஆனாலும்...
ஆறாத்துயரத்தில்
அரண்டுபுரண்டு
அல்லல்படும்
மக்களின்
மனவலிமை
மலைபோல
மாறிவிட்டாலும்,
ஒருசாண்
வயிறுமட்டும்
ஒழிவு மறைவின்றி
உணர்வைக் கிளறி
மீண்டும்
வருகிறவாண்டை
வரவேற்கச் சொல்கிறது
நல்ல காலம் பிறக்குமென!
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.