வண்டி வாங்கிய கதை!
அப்பா
புதிதாய் வாங்கிய
ஸ்கூட்டி தனக்குத்தானென
தன் நண்பர்களிடம் பெருமைப்பட
சொல்லிக் கொள்கிறான்
ஏழாவது படிக்கும் மனோ.
இல்லையில்லை...
எனக்குத்தானென
கூட்டமாய்ச் சொல்லி மகிழ்கின்றனர்
மனோவின் தங்ககைகளான
சரிதாவும் சாதனாவும்.
உள்ளூருக்கு
உதைக்கச் சரிபடலயாம்
அதனால ஸ்கூட்டி வாங்கியதாய்
புதுவண்டி குறித்துக் கேட்பவர்களிடம்
கதையாய்ச் சொல்கிறான் சங்கரன்.
மூன்று மாதத்திற்கு முன்பு
இராணுவத்திலிருந்து பணி ஓய்வில்
ஊர் வந்து சேர்ந்த
கோமதியின் அண்ணன் கார்த்திக்
ஆக்டிவா வாங்கியதின் பொருட்டு
சங்கரன் ஸ்கூட்டி வாங்கி இருக்கிறான்
என்பது
அவன் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல
ஏன்...?
எங்களுக்கும் உங்களுக்கும் கூட
தெரியாதவொன்றுதான்!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.