எல்லைக்கோடு
ஏற்றத்தைத் தருவதற்கே எல்லைக் கோட்டை
எழுதுவதில் தவறில்லை ! வறுமைக் கோட்டில்
மாற்றத்தைச் செய்வதற்குக் காலம் வைத்தே
மாநிலத்தை ஆள்பவர்கள் திட்ட மிட்டால்
நாற்றத்தில் இருக்கின்ற குடிசை யெல்லாம்
நறுமணத்தில் கமழாதோ ! பசியின் ஓலக்
கூற்றுவனின் பிடியிருக்கும் ஏழை மக்கள்
குதுகுலமாய் விடுதலைதாம் பெற்றி டாரோ !
வீடுகளுக் கிடையினிலே மட்டு மன்றி
விளைந்துவளம் கொழிக்காமல் பக்க முள்ள
நாடுகளுக் கிடையேயும் எல்லைக் கோட்டை
நாம்வரைந்து வைப்பதிலே பயன்தான் உண்டோ !
காடுகளில் வாழ்கின்ற விலங்கிற் குள்ளே
காண்கின்ற அன்புதனை நாமும் பெற்றால்
கோடுகளுக் கிடமின்றி மனங்க ளுக்குள்
கொல்பகையும் வெறுப்பும்போய் இணையும் ஒன்றாய் !
சாதிகளால் போடுகின்ற எல்லைக் கோட்டின்
சாதனைகள் வன்முறையும் கொலைக ளாகி
வீதிகளில் அமைதியின்றி காத லின்றி
விளைசினத்தால் மனிதம்தாம் எரிந்து போகும் !
ஓதிவாழ முன்னோர்கள் எழுதி வைத்த
ஒப்பற்ற இலக்கியங்கள் வழியில் நின்று
போதிக்கும் பூங்குன்றன் புத்தர் ஏசு
பொதுமையிலே எல்லைகளைத் தகர்த்து வாழ்வோம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.