உழவர் திருநாள்
உழைக்கின்ற உழவரினை மதிக்கும் நன்னாள்
உழைக்கின்ற உழவரினை மட்டு மன்றி
உழைக்கின்ற உழவர்க்குத் தோளாய் நாளும்
உழைக்கின்ற மாடுகளை மதிக்கும் நன்னாள் !
தழைக்கின்ற வாழ்விற்கு வேராய் நின்று
தம்முழைப்பை நல்குகின்ற உழவ ரோடு
மழைபோன்று பிறருக்கே உதவு கின்ற
மாடுகளை வணங்குகின்ற நன்னாள் பொங்கல் !
கலப்பையினைத் தோள்தூக்கி விடியற் காலை
கழநியிலே உழதுபயிர் விளைய வைத்து
நலமாக வளரநாளும் நீரைப் பாய்ச்சி
நன்றாகக் களைபிடிங்கி எருவு மிட்டு
நிலவுவரும் இரவினிலும் பகலின் போதும்
நிலைத்தகண்ணால் வரப்பிருந்து பாது காத்து
களத்துமேட்டில் மூட்டைகளாய் நெல்கு விக்கும்
கறுத்தமேனி உழவரினை போற்றும் நன்னாள் !
சோற்றினிலே நாம்கையை வைப்ப தற்குச்
சொல்லொண்ணா துயரினொடும் பசியி னோடும்
சேற்றினிலே கால்வைக்கும் உழவர் வாழ்வில்
செழிப்புவந்து பொழிவதற்கு வாழ்த்தும் நன்னாள்
ஏற்றங்கள் நமக்களிக்கும் உழவர் வாழ்வில்
ஏற்றங்கள் குவிவதற்கு வாழ்த்தும் நன்னாள்
போற்றிடுவோம் போற்றிடுவோம் நன்றி சொல்லிப்
போற்றிடுவோம் உழவரினைப் போற்று வோமே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.