நன்மை எதுவென்று...?
என் மௌனத்தை
உடைத்துக் கொண்டு
வந்த வார்த்தைகளில்
வன்சொற்களின் ஆதிக்கம்
மேலோங்கி இருப்பதை
எதிரிலிருக்கும் உன் முகத்தில்
வெட்டவெளிச்சமாய்க் காணமுடிகிறது.
என் மௌனம் உடையக்
காரணமாய் இருந்த
உன் வன்சொல் வார்த்தைகளை
நான் செவிசாய்த்திடாமல்
நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
நான் முட்டாளாகிப்போக
வேண்டுமென்று
இன்றென் வரையறைக்குள்
முடுக்கப் பட்டிருப்பதை அறியாமல்
என் அழகிய மௌனம் உடைய
முட்டாளாகிப் போனேன்.
என்னில் இயல்பாய்
மீண்டுமொரு மௌனம்
புதுப்பொலிவுடன் குடிகொள்ள
இன்னும் சிறிது காலமாகலாம்.
அவசியமற்ற
செவிசாய்த்தலுக்குரிய தண்டனையாய்
அதுவரை
காத்திருக்கப் போகிறேன்.
இனி எதிரியின்
வஞ்சகவலையிலும் சூட்சுமவட்டத்திலும்
விழுந்திடக் கூடாதெனும்
எல்லைமீறா
தீர்மானத்துடன் இருத்தலே
எனக்கு மட்டுமல்ல
எல்லோர்க்கும் எப்போதும்
நன்மையென்று அறிகிறேன்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.