துவாரங்களின் ரகசியம்!
துவாரங்களின் ரகசியத்தை
சீறும் பாம்புகளிடத்தில்
கேட்காது போனாலும்
சிறு நண்டுகளிடம்
கேட்டிருக்க வேண்டுமல்லவா...?
பூனையின்
துரத்தலுக்குப் பயந்த எலி
தற்காலிகமாய்
நுழைந்த துவாரம்
எலியினுடையதாக இருக்குமா...?
அது விஷப் பாம்பின்
துவாரமாக இருந்தால்...!
நண்டுகளிடம் கேட்ட
துவாரங்களின் ரகசியத்தைக் கொண்டு
நீ நுழைவாயேயானால்
சீறும் பாம்பிடம் விஷக்கடிவாங்க
நேரும் பட்சத்தில்
துவாரங்களின் ரகசியம்
பயனற்றுப் போகாதா...?
நண்டுகளிடம்
கொடுக்குப் பிடி வாங்கினாலும்
அப்படித்தானே?
அது பூரான்களின் துவாரமாக
இருந்தாலும்
எறும்புகளின் புற்றாகவே
இருந்தாலும்
துவாரங்களின் ரகசியம்
பொய் பொய்தானே...?
அதுவதுவிற்கென
தனித்தனியே துவாரங்களிருப்பினும்
சூழ்நிலைக் காரணங்களால்
அதனதன் புகலிடமும்
துவாரங்களும் மாறுபடலாம்.
அந்தத் துவாரங்களின் ரகசியத்தை
முழுமையாய் அறிந்தவர்
எவருமிலர்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.