நெடுவாசல்
காடாய் மேடாய் இருந்த நிலத்தை
நாடாய் மாற்றினார் நம் முன்னோர்
ஆனாலும் அணுவளவும்
இயற்கையை அவர்கள் சிதைக்கவில்லை
இயற்கைக்கு நாம் வைக்கும் வெடி
நம்மை நாமே அடித்துக் கொள்ளும் தடி.
மலையை உடைத்தார் தடுக்கவில்லை
ஆற்றை அள்ளினார் அலறவில்லை
கழிவை விட்டு ஆற்றிலே
நோய் பெருகியது நாட்டிலே
காற்றும் நீரும் மாசான போதும்
கண்டு கொள்ளவில்லை நாமும்.
வாடிவாசல் போராட்டம்
நெடுவாசல் நோக்கித் தொடர்கிறது
தலைவனில்லா கடற்கரைப் போராட்டம்
பல தலைவர்களை நடுநடுங்க வைத்தது
தொடரும் நெடுவாசல் போராட்டமும்
நெடிய வரலாறு எழுத வேண்டும்.
மத்திய மாநில அரசுகள்
அசுர பலம் பெற்றிருந்தாலும்
மக்கள் விரும்பாத் திட்டத்தை
செயல்படுத்தினால் நட்டமென
உணரும் நிலையை உருவாக்கி
நெடுவாசல் அடையும் வெற்றிவாசல்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.