ஆழ்கடலின் சங்காக
வாழ்க்கைக்காய் ஒப்பனைகள் நாளும் செய்து
வருவோர்முன் முகந்தன்னைக் காட்டிக் காட்டி
ஆழ்கடலின் சங்காக வீட்டிற் குள்ளே
அழுகின்ற கண்ணீரும் தெரியா வண்ணம்
பாழ்ப்பட்டு முதிர்கன்னி யாக நிற்கும்
பாவையர்கள் விழிகளிலே கனலை ஏற்றித்
தாழ்வெரிக்கப் புயலைப்போல் கரைக டந்தால்
தலைகீழாய் மாறிவிடும் ஒளிர்வர் சங்காய் !
வாழ்ந்திருந்த பெற்றோரை உறவை விட்டு
வாழ்வதற்குக் கணவனில்லம் வந்த போது
சூழ்நிலைகள் மாறிமாமி நாத்தி மார்கள்
சூழ்ந்துநின்று சுடுசொல்லால் துளைக்கும் போதோ
ஊழ்வினைதாம் எனமற்றோர் அறியா வண்ணம்
உள்ளுக்குள் உணர்வுகளின் குமுற லோடே
ஆழ்கடலின் சங்காக இருந்தி டாமல்
ஆர்த்தெழுந்தால் வலம்புரியின் சங்காய் ஒளிர்வர் !
ஆண்கள்தாம் உயர்வென்று பெண்கள் தம்மை
ஆழ்கடலின் சங்காக அழுத்தி வைத்துத்
தாண்டாதே படியென்று வீட்டிற் குள்ளே
தம்விருப்பம் போல்நடத்தி வருவ தெல்லாம்
மாண்டகாலம் ஆகுமென்று பாரதி சொன்ன
மாக்கவிதை ரெளத்திரத்தை ஏற்றுக் கொண்டால்
பூண்டிடுவர் புதுக்கோலம் விண்ணி லேறிப்
புதுசரிதம் படைத்திங்கே ஒளிவர் சங்காய் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.