மலரின் காதல்
இன்று
பூக்கலாமென்றிருக்கிறேன்
என் செடியில்.
பூக்க வேண்டுமாயின்
முதலில்
நான் அரும்ப வேண்டும்.
பிறகுதான்
என்னால்
பூத்துச் சிரிக்கவியலும்.
நான் மணக்கவும்,
பிறர் மனங்களைக் கவர
எண்ணியதும்
சாத்தியமாகக் கூடும்.
நான் அரும்பானதும்
முதலில்
என்னிடம் அடாவடித்தனம்
செய்தது கள்வண்டொன்று.
மலர ஆரம்பித்ததும்
என்னைக் காயமாக்காமல்
தன் ஒரு தலைக் காதலைச்
சொல்லிப்போனது
வண்ணத்துப்பூச்சியொன்று.
என்னவனிடம்
நான் காதலைச் சொல்ல
காத்திருக்கிறேன்.
என் ஜீவிதம்
சருகாகும் முன்னமே
அவன் வரவேண்டும்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.