காலத்தின் வஞ்சத்தில்...
எனக்கென்றிருந்த உறவு
என்னைவிட்டு
ஏழ்கடல் தாண்டி
ஏழு பிறப்பில் எப்பிறப்புக்குள்
ஆன்மாவை
அடகு வைத்ததோ
நானறியேன்
எந்தன் பிறப்பையும்
நானறியேன்
அறியாதவுணர்வில்
அம்மாவாக
அரவணைத்து
அழகான குடிசையில்
அரசியாக
அழகு பார்த்து
ஆணுக்கு நிகராக
அறிவுரையளித்து
ஆடலும் பாடலுமாய்
ஆர்பரிக்க உறுதியளித்தாய்
எத்தனைக் கனவுகள்
அத்தனைக் கனவுகளையும்
எனக்குள்
இயல்பாய் நுழைத்தாய்
உந்தன் மகிழ்வில்
உறவைத் தேடவில்லை
உயிரைத் தந்த
தாயைத் தேடவில்லை
என்னையே தேடவில்லை
எனக்கே சொல்லாது
என்னையே நினைக்காது
உந்தனுயிரை
ஒடுங்க வைத்தாய்
உயிரற்ற உடலை
ஓர் நிமிடமேனும்
காண வழியற்ற
காரிகையாக
காலத்தின் வஞ்சத்தில்
கண்ணீருடன்
இவள் அப்பா.
- வாணமதி, சுவிட்சர்லாந்து.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.