தொடர்வண்டிப் பயணம்
பேருந்து பயணமதில் கைகால் தம்மைப்
பெருமளவு அசைப்பதற்கும் முடிந்தி டாது
சீருந்தாம் மகிழுந்தில் பயண மென்றால்
சிறப்பெனினும் திரும்புதற்கும் இயன்றி டாது !
காருந்திப் பறக்கும்வான் ஊர்தி தன்னில்
காண்பதற்குக் காட்சிகளோ தெரிந்தி டாது
நீருந்திச் செல்கின்ற கப்ப லோடு
நீண்டதொடர் வண்டியும்தாம் இன்ப மென்பேன் !
கால்நீட்டி நடந்திடலாம் கையி ரண்டைக்
கச்சிதமாய் அசைத்திடலாம் ! பசித்த போது
பால்பழங்கள் சிற்றுண்டி உணவைக் கூட
பக்குவமாய் உண்டிடலாம் வீடு போன்றே !
நால்வருடன் எதிரெதிரே அமர்ந்த வாறு
நாள்நடப்பைப் பேசிடலாம் முகத்தைப் பார்த்தே
வால்நீண்ட பெட்டிக்குள் கழிவைப் போக்கும்
வசதிகளும் இருப்பதாலே தொல்லை இல்லை !
இலக்கியத்து நண்பரெனில் பட்டி மன்றம்
இனிமையான கவியரங்கம் கருத்த ரங்கம்
பலப்பலவாய் நடத்திடலாம் ! நல்ல நூல்கள்
படிப்பதற்கும் படுப்பதற்கும் வசதியாகும் !
கலகலப்பாய்க் குடும்பத்தார் சுற்ற மெல்லாம்
கரங்கோர்த்தே பாடிடலாம் கதைகள் பேசி
நலமாகத் தொடர்வண்டி கப்பல் தம்மில்
நான்சென்றே மகிழ்ந்திட்டேன் ! மகிழ்வோம் சென்றே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.