பச்சை நிலம் காப்போம்!
பச்சைநிலம் போல்வயல்கள் பட்டு டித்திப்
பருவமெய்த மங்கையவள் முகத்தைப் போல
இச்சையினைத் தூண்டுமெழில் பயிர்க ளாக
இளங்காற்றில் கொடியசைதல் போல சைந்து
மூச்சினிலே முற்றியநெல் மணத்தைச் சேர்த்து
முப்போகம் விளைந்திட்ட தஞ்சை மண்ணோ
பேச்சிழந்தே ஊமையான பேச்சா ளன்போல்
பெப்பெப்பே ஆனதின்று நீரே யின்றி !
பெய்தமழை பொய்த்திடவும் பாய்ந்த ஆறோ
பெரும்வழக்கில் அடைப்பட்டு முடங்கிப் போக
செய்தமூன்று போகமது ஒன்றாய் ஆகிச்
செய்வதற்கு வழியின்றி அதுவும் போக
மெய்குறுகிப் பெற்றகடன் அடைப்ப தற்கு
மெய்யாக ஒருகாசும் கையி லின்றி
உய்யவழி தெரியாமல் வரிசை யாக
உயிர்தன்னை விடுகின்றார் உழவ ரின்று !
நலமாக நாமுண்ண நலிவை யேற்று
நாளுழைத்த உழவரின்று வாடு கின்றார்
உலகத்தைக் காத்தவனோ பயிரைக் காக்க
ஊரின்முன் நிற்கின்றான் கையை ஏந்தி !
குலம்காக்கக் குலத்தொழிலாம் விவசா யந்தாம்
குலைந்திடாமல் காப்பதற்கே தில்லி மண்ணைக்
களமாக்கிப் போராடும் விவசாய் கட்குக்
கரம்கொடுப்போம் பசும்நிலத்தைக் காப்போம் வாரீர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.