காணாமல் போன நீர்!
நீ என்னைவிட்டு விலகிச் சென்ற நேரம்
உச்சி வெயிலில் தனிமையில் நடந்தேன்
காணும் நீரைக் காலால் எட்டி உதைத்தேன்
சிறுகல்லை அதில் போட்டு ஆழம் கண்டேன்
மீன் குஞ்சுகளை நீந்தப் பழக்கினேன்
அல்லி மலரை அதிலிட்டு அழகு பார்த்தேன்
காணல் நீர் கரைபுரலா வண்ணம்
மரம் செடிகளை பலவாய் நட்டேன்
நட்ட மரமோ நெடுந்தோள் வரை வளர்ந்திருக்க
குருவிகளோ தொங்கும் கூட்டை நெய்தது
அந்தி சாய்கையில் யார் கண்பட்டதோ
அத்தனை நீரும் வற்றிவிட்டது
மீனும் நானும் தரை மேல் துடித்தோம்
மரமும் குருவியும் அடியோடு சாய்ந்தது
மடைபோட்டு உன்னைக் கட்டிக் காத்தும்
சொட்டும் மிச்சமின்றி உன்னை உறிஞ்சியவன் யார்?
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.