நீயும் நானும்
நீ
தேநீர் பருகிய
கோப்பையைக் கழுவி
கவிழ்த்த பின்னரும்
அதில் மிச்சமிருக்கிறது
நீ
அருந்திய
தேநீரின் சுவை.
நீ
குளித்து விட்டு
வந்திருக்கிறாய்
குளியலறையை விட்டு
வர மறுக்கிறது
உந்தன் வாசம்.
நீ
தலைசீவிய சீப்பில்
சிக்குண்ட உனது கூந்தல்
முடிகளெல்லாம்
உந்தன் லாலி
பாடிக் கொண்டிருக்கிறது.
உனது
முகம் தழுவிய
குட்டிக்கூரா பௌடர்
எனக்கு
முகம் காட்ட மறுக்கிறது.
செயற்கைப்
பொருளுக்கெல்லாம்
நீ
செய்வினை
செய்து விட்டாய்.
என்னில்
செழிப்பாய் இருக்கிறது
உனக்கான
எனது உலகம்.
நீயோ
என்னைத் துண்டு போட
நினைக்கிறாய்
நானோ
உன்னை என்னுடன்
ஒன்று சேர அழைக்கிறேன்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.