இப்பூமி மட்டும்...!
தலைக்கு மேல்
பரந்திருக்கும் ஆகாயத்தைப்
பங்குப்போடத் திராணியில்லை.
சிவப்பை உலுக்கி மினுக்கும்
நெருப்பின் சுவாலையை
கட்டியணைக்க இயலவில்லை.
ஓடுகின்ற வெள்ளத்தைக்
களத்தில் கூறுபோட்டுப்
பிரிக்க வழியுமில்லை.
சிதறிக்கிடக்கிற வெளிச்சத்தை
ஒரு பிடி அள்ளி
எடுக்கத்தெரியவில்லை.
சுதந்திரமாய்ச் சுற்றித்திரிகிற
காற்றைக் கட்டிப் போட
முடியவில்லை.
கொஞ்சம் இருளைத்திருடி
மறைத்து வைக்கும்
சூட்சுமம் தான் அகப்படவில்லை.
பாவம்-
இப்பூமி மட்டும்
பாழாய்ப் போன
மனிதன் கையில்
படாதபாடு படுகிறது...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.