மாயா
கனவுகளை
விற்றுக் கொண்டிருப்பவனிடம்
காட்சிகளை
விவரிக்கச் சொல்கிறேன்
செய்முறை விளக்கம்
அவசியமென்று.
முத்தங்களின்
ஈரத்தைச் சுவைக்க
இதழ்களுக்கு மட்டுமே
அனுமதி
வழங்கப்பட்டிருக்கிறது.
அன்பின் புரவியில்
கட்டமைத்த
இதயவீட்டின் நிழலில்
இளைப்பாற ஓடி ஒளியும்
காதல் மனங்கள்.
இந்த அந்தியில்
உனது வருகையாயின்
நாளையின் அந்தியில்
என்னை எதிர்பார்க்கலாம்
நீயும்.
இருந்து கொண்டிருக்கும்
இவ்வுலகில்
இல்லாமல்
போகப்போவது மட்டும்
சிலதே.
நிலைக்கண்ணாடியில்
உன்முகம்
பார்க்கும் முன்
உன் தரிசனத்தை
எனக்குச் சொந்தமாக்கி
விட்டுச் செல்
பின்னர்
எனக்குக் கனவு காண்பது
சுலபம்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.