நானும் எனது கவிதையும்
கவிதைப்பயிரிடும்
ஆசையில்
என் மனநிலத்தில்
வார்த்தைகளை விதைத்து
என் எண்ணப்பதிவினை
நீரெனப்பாய்ச்சினேன்.
செழிப்பான
வார்த்தை நாற்றுகளை
பதியமிட்டு நட்டுவைத்ததில்
வீரியம் மிகுந்த
வித்துக் கவிதைகள்
செழித்து வளர்ந்தன.
நன்னாளில்
அறுவடை முடித்து
என் தேவைக்குப்போக
மீதமுள்ள கவிதைகளைச்
சந்தையில் விற்கப்போனேன்.
என்னைப்போல்
பலரும்
சந்தையில் கவிதைகளைக்
குவித்து வைத்திருக்கின்றனர்.
பலரும்
கவிதைப் பயிரிட்டதில்
மகசூல் பெருகி
விலை மலிய விற்பனையாகாமல்
தேக்கத்திலிருக்கின்றன
நிறைய கவிதைகள்.
எல்லோரையும் போல
நானும் அப்போது தான்
உணர ஆரம்பித்தேன்.
கவிதையைப் பயிரிடுவதை விட
முதல் தரமுள்ள
நல்ல கவிதைகளை
வாங்கிச் சுவைத்து மகிழ்வதே
பெரும் பேரின்பமென்று
அறிகிறேன்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.