கல்லறைப்பூவின் கண்ணீர்த்துளி
குழந்தையொன்று பிறக்கவில்லை என்றே நாளும்
குறுகியுள்ளம் ஏளனத்தில் துடிக்கும் பெண்ணை
வழக்கமாக மாமியாரும் சொல்லால் குத்தி
வடுதன்னை மேன்மேலும் புண்ணாய் செய்தாள்
பழகிவந்த சுற்றத்தார் அக்கம் பக்கம்
பார்வையிலே எரிசொற்கள் பாய்ச்சிச் சென்றார்
அழகியெனப் புகழ்ந்தன்பால் அணைத்த கணவன்
ஆறுதலும் சொல்லாமல் பார்த்து நின்றான் !
மருத்துவம்தாம் வளர்ந்துள்ள இந்த நாளில்
மகப்பேறு குறையறியும் வழியி னாலே
அருங்குழந்தை உருவாக்கும் தகுதி என்னும்
ஆண்மையில்லை எனும்உண்மை அறிந்தி ருந்தும்
பெரும்பான்மை ஆண்களிங்கே மனைவி மீதே
பெரும்பழியைச் சுமத்துகின்ற அவலத் தாலே
பெருமைமிகு தாய்மைக்குத் தகுதி பெற்றும்
பெண்ணவளோ வாயில்லா பூச்சி யானாள் !
ஆண்மகனைத் தூற்றாது பெண்ணை மட்டும்
அழவைத்துப் பார்க்கின்ற சமுதா யத்தால்
மாண்டபின்பு என்னுடலை எரித்தி டாதீர்
மண்ணுக்குள் புதையுங்கள் அப்போ தேனும்
தீண்டியென்றன் வயிற்றுக்குள் புழுவும் பூச்சி
திரிந்துபழி மலடிச்சொல் நீங்கும் என்றே
மாண்பான தன்னுயிரை மாய்த்துக் கொண்ட
மங்கையவள் கண்ணீரைத் துடைக்க வாரீர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.