முக்திப் போர்
கோவிலின் உள்ளே அவளிருக்க, மணியோசை
எனக்கு அழைப்பிதழ் அனுப்பியது
தட்சனை இல்லாத பக்தனாய்
அவள் பின்னால் உலா சென்றேன்
அவளின் ஒவ்வொரு பார்வையிலும்
கோபுரத் தூண்கள் வலுப்பெற்றன
அவள் உற்றுப் பார்த்த சிலைகளோ
நாணிக் குனிந்து கண்களை மூடிக்கொண்டன
தேவாரப் பாடல்களோ வரி மாறி
இவள் புகழைப் பாடியது
அவள் கை கூப்பிக் கடவுளை வணங்க
சிவனவன் தரிசனம் பெற்றான்
அவள் உடுத்தியிருந்த பட்டோ
பார்வதியைப் பின்னுக்கு தள்ளியது
இதனால் முக்கண்ணுடைய சிவனுக்கும்
எனக்கும் முக்திப் போர் மூண்டது
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.