மறுபிறப்பு
தனக்காக சொந்தமாக வீடு மின்றித்
தனக்கென்று குடும்பமாக யாரு மின்றித்
தனக்கென்று எதுவொன்றும் சேர்த்தி டாமல்
தனக்கென்று விருப்புவெறுப் பேது மின்றித்
தனக்காக வாழாமல் நாட்டிற் காகத்
தன்வாழ்வை அர்ப்பணித்த காம ராசர்
தனதுநாட்டைக் காணமீண்டும் உயிர்தெ ழுந்து
தமிழகத்தில் கால்வைத்தார் அதிர்ந்து போனார் !
எங்கெங்கும் அரசியலார் விளம்ப ரங்கள்
எத்திக்கும் ஆட்சியாளர் புகைப்ப டங்கள்
தங்களுடை குடும்பத்தின் உறுப்பி னர்க்குத்
தம்கட்சி ஆட்சியிலே பதவி யளிப்பு
வங்கிகளில் பணக்குவிப்பு ஊர்கள் தோறும்
வளைத்துபோட்டு பினாமிபேரில் நிலம்கு விப்பு
செங்கோலோ கொடுங்கோலாய் ஊழல் செய்து
செழிப்பதினைக் கண்டுமனம் துடித்துப் போனார் !
நீண்டகால திட்டங்கள் போட்டி டாமல்
நிலையற்ற இலவசத்தால் மகிழ வைத்து
வேண்டுமட்டும் மதுகொடுத்து மதிம யக்கி
வெளிப்படையாய்க் காசிற்கே வாக்கை வாங்கி
ஆண்டவனாய்த் தலைவரெல்லாம் மாறிப் போன
அலங்கோலக் காட்சிகண்டே தன்னை யாரும்
மீண்டுமிங்கே மதிக்கமாட்டார் என்றே நெஞ்சுள்
மீளாத துயரமுடன் திரும்பிச் சென்றார் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.