விதையின் பயணம்...
பூமியும்
நிராகரித்த என் நிழலை
நான் யாருக்கென்று
பரிசளிப்பேன்.
வானின்
நீலத்தைத் தின்று
ஜீரணிக்கிறது பெருங்கடல்.
பச்சை
நிறத்தைப் பூமிக்குப்
பரிசளித்து விட்டது
இயற்கை.
மாறிமாறிப் பிறப்பெடுக்கிறது
சாகாவரம் பெற்ற
பிரபஞ்சத்தின் காலங்கள்.
புலியின் பசிக்கு
என்றும் இரையாவதில்லை
பசும்புற்கள்.
அனைத்து உயிர்களிடத்திலும்
உண்டு
கருணைக் கொடி.
தீயைத் திருடி
மீண்டும் தீயைத்தான்
செய்யப் போகிறாய்.
பூமிமேல் வசந்தம் வந்தால்
பூக்களுக்கு மட்டுமா
கொண்டாட்டம்?
மாரி
பயனற்று போனால்
நமக்கெல்லோருக்கும் தான்
திண்டாட்டம்.
உடலில் ஓடத்தான்
செங்குருதி.
வீணாய்க் கால்களில்
மிதிபட்டுப் போக அல்ல.
விதையின் பயணம்
ஒரு துளி குருதியின்
ஈரத்திலும் உயிர்த்தெழலாம்
தோழனே...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.