சுதந்திரப் பறவை
வீட்டின் முற்றத்தில்
அழகிய குருவிக் கூடு
அதில் குருவிகளிரண்டும்
காதலிக்கும் காலம்
நானும் காதலில் விழுந்தேன்.
குருவி முட்டைகளிட்டு
அடைகாத்து குஞ்சுப் பொரித்து
தாயாகும் காலத்தில்
நானும் பாசமுள்ள தாயானேன்.
மின்மினிகளை
கூண்டுக்குள் வைத்து
குஞ்சுகளையது பாதுகாத்த காலத்தில்
நானும் பொறுப்புள்ள தந்தையானேன்.
அவை
குஞ்சுகளுக்கு இரையூட்டும் காலம்
நானும் தாய் தந்தையென
ரெட்டைவேடம் ஏற்கலானேன்.
சிறகுகள் முளைத்து
றெக்கைகளை விரித்து
குருவிகள் பறக்கும் காலம்
நானும் சேய்க் குருவியானேன்.
குருவியின் பறத்தலும், ஆகாயத்தையளத்தலும்
அதன் சுறுசுறுப்பும்
ஆசையற்ற மனமும் அளவான கூடும்
எனக்குச் சுகமாகிப் போனதில்
குருவியாய் வாழ்தலே
வரமென்றிருக்கிறேன் நான்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.