சுதந்திரம் காத்திடுவோம்!
காந்தியண்ணல் பெற்றளித்த சுதந்திரம்
கண்களெனக் காத்திடுவோம் சுதந்திரம்
சாந்திவழி நின்று பெற்ற சுதந்திரம்
சமாதானத்தில் காத்திடுவோம் சுதந்திரம் !
மாட்டைப்போல் செக்கிழுத்துச் சிதம்பரனார்
மண்ணடிமை வென்றளித்த சுதந்திரம்
வேட்டுவைக்கும் மொழியின வேறுபாட்டை
விலக்கியொன்றாய்க் காத்திடுவோம் சுதந்திரம் !
மண்டையினை உடைத்தபோதும் கொடியினையே
மண்விழாமல் குமரன் காத்த சுதந்திரம்
சண்டையின்றிச் சாதிமத பகைமையின்றிச்
சமத்துவத்தில் காத்திடுவோம் சுதந்திரம் !
தொழுநோயில் துடித்தபோதும் வெள்ளையனை
துரத்தி சிவா பெற்றளித்த சுதந்திரம்
அழுகவைக்கும் ஊழலினை அகற்றி நேர்மை
ஆட்சியிலே காத்திடுவோம் சுதந்திரம் !
கடல்கடந்த அந்தமானின் சிறையினிலே
கல்சோறு உண்டு பெற்ற சுதந்திரம்
தடம்மாறிப் போகாமல் உழைப்பினிலே
தலைநிமிர்த்திக் காத்திடுவோம் சுதந்திரம் !
நேரு சுபாசு பகத்சிங்கின் தியாகத்தாலே
நேரில் நாம் காணுமிந்த சுதந்திரம்
மேருமுதல் குமரிவரை உயிர் கொடுத்தே
மேன்மையுடன் காத்திடுவோம் சுதந்திரம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.