ஜோதிடம்

வானியல் மண்டலத்தின்
நிகழ்வுகள்
என்றென்றும் தொடர்ந்தபடி...
அரிது! அரிது!
மானிடராய்ப் பிறத்தல் அரிது!
எண்பத்து நான்கு
நூறாயிர யோனி பேதத்தின்
சிறந்த பிறவி
சரத்துள் அடங்கிய மானிடப்பிறவி!
கர்ம வினையின்
தொடர்பு மானிடப்பிறவி!
வானியல் மண்டலத்தின்
நிகழ்வுகள்
என்றென்றும் தொடர்ந்தபடி...
பாரபட்சமின்றி
சரம், அசரம் அனைத்திற்கும்...
எத்தனையோ திருநாமங்கள்!
பெறுகின்றன நவகோள்கள்!
கோட்சாரத்தில் தான்
எத்தனை முக்கியத்துவம்!
வாழ்வினைப் பிரதிபலித்துக்
காட்டும் கண்ணாடி கோட்சாரம்!
என்றுமே மாறாதது
ஜனன கோட்சாரம்…
நிகழ்வில் நிகழ்வதை மெய்ப்பிக்கும்
தற்கால கோட்சாரம்…
உயிராய் விளங்குவது
இலக்னம்...
மெய்யாய் விளங்குவது
இராசி…
உயிரும், மெய்யும்
இணைந்து தொடர்கின்றது…
நம் வாழ்வின் பயணம்!
கிரகப் பார்வையில்
எத்தனை அற்புதங்கள்?
எத்தனை பலன்கள்?
நவக்கிரகங்களின் பொதுப்பார்வையாம்
ஏழாம் பார்வை!
குரு, சனி, செவ்வாய்
பெறுமே அவை தாம்
சிறப்புப் பார்வையாம்…
சனியைப் போல் ராகுவும்,
செவ்வாயைப் போல் கேதுவும்
பார்வையாம்…
ஒன்பது எண்ணினில்
உலகினை அடக்கும்
எண்ணியல் கணிதம்!
அங்க அவயங்களை
பட்டியலிடும்
சாமுத்திரிகா இலட்சணம்!
ரேகையினை அழகாய்
விளக்கிடும்
ரேகை இலட்சணம்!
ரேகை சாஸ்திரம்!
மனையின் இலட்சணங்களை
பட்டியலிடும்
மனையடி இலட்சணம்!
மனையடி சாஸ்திரம்!
சாதகம் இல்லா
அனைவருக்கும் பிரசன்னம்...
என்றுமே கை கொடுக்கும்
ஆரூட இலட்சணம்! ஆரூட சாஸ்திரம்!
இடி, மின்னல், காற்று, மழை,
வானவில் போன்ற வானியலின்
அற்புதங்களை அறிவிக்கும்
மழைக்குறி சாஸ்திரம்!
குளம், கிணறு போன்றவற்றின்
நீர்வளம் காட்டும்
கூப சாஸ்திரம்!
முகக்குறி அறிவிக்கும்
குறி சாஸ்திரம்!
தேங்காயின் பலன்களை அறிவிக்கும்
தேங்காய்க்குறி சாஸ்திரம்!
இன்னும்…
எத்தனை! எத்தனை!
வகைப்பாடுகள்!
உட்பிரிவுகள்!
சோதிடத் தாயின் ஆபரணங்கள்
அனைத்துமே அழகு தான்!
வானியல் மண்டலத்தின்
நிகழ்வுகள்
என்றென்றும் தொடர்ந்தபடி...
ஆத்மா, மனது, சகோதரன்,
வித்யா, புத்திரம், ரோகம், காமம்,
ஆயுள், கருமம், இலாபம், ஞானம், மோட்சம்
ஆகியவற்றின் காரகனாய் நின்று
பன்னிரு பாவகத்தினை
அழகாய் இயக்கி விளக்கிடும்
நவகோள்கள்!
வானியல் மண்டலத்தின்
நிகழ்வுகள்
என்றென்றும் விண்ணில்
தொடர்ந்தபடி...
- முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை, அச்சிறுப்பாக்கம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.