இரண்டும் கெட்டான் வயசு
பதின் வயதைத் தொடும் வரை
எல்லோருக்கும் நான் செல்லப்பிள்ளை
என்னுடைய செயல்களையெல்லாம்
ரசித்து மகிழ்ந்தனர் குடும்பத்தார்
அவர்கள் பார்வையில் குழந்தை நான்.
வருடங்கள் ஓடியதால்
பதின் வயதில் பயணித்தேன்
என் செயல் எதுவும் மாறவில்லை
அவர்கள் பார்வையில் தான் மாற்றம்
எதைச் செய்தாலும் குறைகாணும் மனநிலை .
பெரியவர்கள் கூடினார்கள்
வீட்டின் மைய அறையில் மகிழ்ச்சியாய்
பேச்சும் தொடர்ந்தது கலகலப்பாய்
நானும் அங்கே நுழைந்தவுடன்
ஏனிங்கு சிறுபிள்ளை போல் என்றனர்.
இன்னொரு நாள் அதே இடம்
அதே போலொரு உரையாடல்
எடுத்துச் சொல்ல முயன்றேன்
அவர்கள் பேச்சு தொடர்பான என் கருத்தை
பெரியவனா நீ விலகு என்றனர்.
ஒரே இடம் அதே நபர்கள்
ஒருநாள் சிறியவன் ஒருநாள் பெரியவன்
குழப்பம் எனக்கா? அவர்களுக்கா?
இரண்டும் கெட்டான் வயதென
என்னைக் குழப்பி விடாதீர்கள் பெரியவர்களே.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.