காதல் கண்ணாமூச்சி
உன் கவனஈர்ப்பு
உச்சிக்காலப் பொழுதில்
காலுக்கடியில்
மிதிபடும்
நிழலென உதைபடுகிறது.
நீ - அழுகையிலும்
அழகாய் இருக்கிறாய்
என நான் சொன்ன
சின்னப் பொய்
மேலும்
அழ வைத்துக் கொண் டிருக்கிறது
என்னை.
அமாவாசை இரவில்
பூமியிடம் கண்ணாமூச்சி
ஆடுகிற நிலாபோல்,
என்னிடம் -
சித்து விளையாடுகிறாய்
நீ.
இருந்தும்
மறைக்கப்படுவது
மன்னித்தருளவியலாத
குற்றம்.
இதை - நீ
உணரும் பட்சத்தில்
நாளை -
விடிகின்ற பொழுது
உன் வசீகர முகத்தில்
புலரும்.
என் -
காதலும்,
காலையும்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.