அண்ணாவின் கருணை

அண்ணாதான் தமிழகத்தின் முதல்வ ராக
ஆட்சியேற்ற சிலநாளில் திருநெல் வேலி
மண்ணிற்குப் பயணமாகச் சென்ற போது
மக்கள்தம் கோரிக்கை நேரில் கேட்டுக்
கண்ணீரைத் துடைக்கின்ற வகையில் தம்மின்
வ்கரங்களாலே அணைத்தவரின் குறைகள் போக்க
தன்னோடு வந்திட்ட அலுவ லர்க்கே
தகுவாணை பிறப்பித்தார் பகலெல் லாமே !
மாலையிலே ஓய்வெடுக்கப் பாளையங் கோட்டை
மாளிகையுள் அண்ணாதான் இருந்த போது
காலைமுதல் பலவிடத்தில் பார்ப்ப தற்குக்
காத்திருந்த முதியப்பெண் அங்கு வந்தார்
ஆலையிட்டக் கரும்பைப்போல் இருந்த அந்த
அம்மாவைக் காவலர்கள் விரட்டும் போது
வேலையிலே மூழ்கிருந்த அண்ணா பெண்ணின்
வேதனைதோய் குரல்கேட்டு வெளியே வந்தார் !
முதியப்பெண் நிலைகண்டு பதறும் நெஞ்சில்
முன்வந்தே என்னகுறை என்று கேட்க
முதியவளோ தளர்ந்திட்ட கரம்கு வித்து
முகம்நோக்கி இந்நாட்டின் விடுத லைக்காய்
எதிரிகளைச் சுட்டுவீழ்த்தி உயிரை விட்ட
ஏற்றமிகு வாஞ்சிநாதன் மனைவி தான்நான்
பதியவரின் தியாகத்தைப் போற்றி ஈயும்
பணத்தாலே வாழ்க்கையினை நடத்து கின்றேன் !
வழங்கிடும்ஓய் வூதியமாம் ஐந்து பத்தில்
வறுமையோடு போராடும் எம்போன் றோர்க்கே
வழங்குதொகை உயர்த்திட்டால் எஞ்சி யுள்ள
வாழ்க்கையினை நடத்திடுவோம் என்று ரைக்க
தழதழத்த குரலினிலே கண்ணீர் மல்க
தாயவரின் தாள்தொட்டுச் செய்வேன் என்றே
வழங்கிட்டார் ஆணையினை நாவால் சொல்லி
வாய்மூடும் முன்கையால் கருணை அண்ணா !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.