விடிவெள்ளி

வாழ்க்கைப் பாதையினில்
தைக்கின்ற நெருஞ்சி முட்கள்…
வாழ்க்கை வானத்தில்
நித்தம் நித்தம்
இடி, மின்னல்,
காற்று, மழை…
வாழ்க்கைச் சூறாவளியில்
சிக்கியும், தப்பியும்
காம்பு கழறாமல் மலர்கள் சில…
வாழ்க்கை எரிமலையில்
கட்டுக்கடங்காது
கனன்று கொண்டிருக்கும்
அக்கினிப் பிழம்புகள்…
தண்டவாளங்கள்
இல்லாமல் இருந்தும்
தடம் புரளா என்றும்
தன்னம்பிக்கைச் சக்கரங்களுடன்
ஓடும் தொடர் வண்டிகள்
வெளியேக் கூற இயலாத
முகாரி ராகங்கள்…
விளரிப்பண்களை மீட்டியபடி…
சிறகுகள் இருந்தும்
இன்றும் பறக்க
இயலாத நிலையில்
வண்ணத்துப்பூச்சிகள் சில…
காட்டாற்று வெள்ளத்திற்கு
அணை எதற்கு?
அலைகள் ஓய்வதில்லை!
என்றுமே கடலில்…
இருந்தும் தலை முழுகியபடி…
ஆதவனைக் கைக்கொண்டு
மறைக்காதே!
வெளிவரும் விரைவில்…
திருப்பாற்கடலை பூனை
குடிக்க இயலாது...
அக்னியில் பொசுக்க
என்றுமே
ஒளி பெறும் தங்கம்!
சிற்பியின் கை பட
கலைநயம் பெறுமே சிலையும்!
நிலமகளின் பொறுமையும்
சாதனையே!
சாது மிரண்டால்
காடு கொள்ளாது?
புலியை முறத்தால்
விரட்டிய மறத் தமிழச்சி!
பால் மறவா மகவினை
போருக்கு அனுப்பிய
சங்க இலக்கிய வீரப் பெண்மணிகள்!
தனித்து நின்று வெற்றி கண்ட
வீரப் பெண்மணிகள்!
பக்தியின் வழி நின்ற
பக்தி இலக்கியப் பெண்மணிகள்!
இன்னும் தன்னலம் கருதா
பிறர் நலம் கருதும்
எத்தனை? எத்தனை?
தன்னை அழித்து
மெழுகாய் உருகிடும்;
வீரமகளிர்கள்!
குன்றின் மேல்
ஒளி விடுகின்ற விளக்கு
ஒளி இழந்த நிலையில்
குடத்திற்குள் மட்டும்
ஒளி விட்டபடி...
திறமைகள் வெளிவராதபடி
நான்கு சுவற்றிற்குள்…
அரும்பவிழ்ந்து மலர்ந்து
பூசைக்குச் செல்லும் முன்னே
சமாதி பூசைக்குச்…
சென்று கருகி
நசுங்கி வாடிய மலர்கள்
எத்தனை? எத்தனை?
உயிர் இழந்த,
உயிருக்குப் போராடும்
எண்ணிறந்த
அபலைப் பெண்கள்!
தொடர்ந்து
அழுத்த வேகத்தினால்…
பூ ஒன்று
புயலாகின்றது!
விரைவில்…
புதியதொரு
விடியலை நோக்குவோம்!
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணாய்!
பார் அதிகம்
வியந்து கண்ட…
அதிசயப் பெண்ணாய்!
வாழிய பாரதம்!
வாழிய பாரதத் தாய்!
- முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை, அச்சிறுப்பாக்கம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.