தாத்தாவும் பெயரனும்
தொலைக்காட்சியில்
மழைபெய்தபடி
கருப்பு வெள்ளைப்படம்.
நல்ல படமென்று
தம் பெயரனை
அமிழ்த்தி அமரவைத்துப்
பார்க்கச் செய்கிறார் தாத்தா.
அந்தக் காலத்தில்
இருநூறு நாட்களுக்கும் மேல்
ஓடிய படமாம்.
வசனங்கள் பாடலாக...
தொடரும்
பத்து நிமிடங்களுக்கு
சமஸ்கிருதம் கலந்த
தமிழ்ப்பாடல்கள்.
முதுமை நிறத்திலும்
படத்தின்
நாயகன் நாயகியாக வரிவிடாமல்
பின்பாட்டுப் பாடுகிறார்
நாயகன் நடிப்பிலும்
நாயகியின் நடன நெளிவிலும்
நெகிழ்ந்து திளைக்கிறார்
தாத்தா.
இன்றைய
நவீனத் தொழில்நுட்பத்தில்
இருபது நிமிட இடைவெளியில்
வருகின்ற வண்ண விளம்பரங்கள்
தாத்தாவிற்குச்
சலிப்பைத் தந்தாலும்
சற்று ஆதரவாய்
நிறைவைத் தருகிறது
பெயரனுக்கு...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.