கைகூடவில்லை...!
சரியாக
இரவு பத்து மணிவாக்கில்
படுக்கைக்குச் செல்கிறேன்
எப்போதும் போல்
சிறிது நேரம்
திறன்பேசி சகிதமாய்
இருந்த பின்னர் உறங்குகிறேன்.
உறக்கத்தில்
ஒரு பெருங்கனவு
வழியத் தொடங்குகிறது.
அக்கனவில்
சுவர்க்கோழி காட்டிற்று
சரியாக
மாலை ஐந்து மணி
அந்நேரம்
நானும் நீயும்
ஒரு பூங்கா இருக்கையில்
அமர்ந்தபடி
நம் காதல்திருமணம் பற்றியும்
எதிர்காலத்
திட்டங்கள் குறித்தும்
சுருள் சுருளாய்
வெகுநேரம்
அளவளாவிக் கொண்டிருக்கிறோம்.
நம் உரையாடல்
கருத்த இரவைப் போல
எல்லை தாண்டி
நீண்ட வண்ணமிருக்கிறது
மறுநாள் இரவிலும்
அந்தக் கனவு
இடைவெளியின்றி
அதே பூங்கா இருக்கையில்
மாலை ஐந்து மணிவாக்கில்
நம் உரையாடலுடன்
திறந்தமேனியாய்
மீண்டும் தொடர்கிறது.
ஓரிரவுக் கனவில்
அசைவற்றிருக்கிறது பூமி.
பூங்கா இருக்கையும்
நம் உரையாடலும்
ஆதி இருளின் கனவும்
நினைவுச் சின்னங்களாய்
அப்புள்ளியை விட்டு
நகராததால்
நம் இளமைக் காலம்
கரையவுமில்லை
இன்னும்
நம் காதல் திருமணமும்
கைகூடவில்லை...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.