அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு
அகத்தினிலே மாசின்றேல் அன்பு பொங்கும்
அழுக்காறோ இல்லையென்றால் நட்பே ஓங்கும்
முகம்கூடக் கள்ளமின்றித் தூய்மை யோடு
முன்நிற்போர் உளம்நுழைந்து தன்பால் ஈர்க்கும்
தகவுடனே அனைவரையும் அரவ ணைத்துத்
தமரென்று பேணிட்டால் சுற்றம் சேரும்
நகமகுடம் விரல்களுக்குச் சூட்டல் போன்று
நன்மைகளை நாம்செய்தால் புகழை வைப்பர் !
உடுத்திட்ட துணியிடுப்பில் நழுவும் போதில்
உடன்கைகள் பிடிக்கின்ற தன்மை போல
அடுத்தவர்கள் துன்பத்தை நாம்க ளைந்தால்
அழைக்காமல் நம்துயரைக் களைவர் மற்றோர்
கடுகடுத்த முகத்துடனே சொல்லு திர்த்தால்
கயவரென்றே பிறர்நம்மை ஏசிச் செல்வர்
நடுத்தெருவில் பழுத்தமரம் போல உள்ளம்
நமதானால் இறையென்றே தொழுவர் நின்று !
தாய்பசியால் துடித்தபோதும் நமக்குத் தீங்கு
தரும்செயல்கள் மற்றவர்கள் செய்த போதும்
வாய்மைவழி மாறாமல் நாமி ருந்தால்
வழிகேட்டு வந்தறம்தான் பொழியும் வாழ்த்தை !
தீய்க்கின்ற சினம்போல மற்ற வர்க்குத்
தீங்குதனைச் செய்வதற்கே நீநி னைத்தால்
பாய்ந்துவந்து வெள்ளம்தான் சூழல் போல
படர்தீங்கை அறமுனக்கே செய்யும் உணர்க !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.