அன்பே அணி
பெற்றதாயும் தந்தையுமே பணிக்குச் செல்ல
பெரும்பொழுதும் காப்பகத்தின் தாதி கையில்
பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் இன்றிப்
பெயர்சொல்லும் குழந்தைகள்தாம் வளர்வ தாலே
உற்றவரின் பாசத்தை அறிய வில்லை
உறவுமுறை குடும்பசூழல் புரிய வில்லை
பற்றுதற்குக் கொம்பில்லா கொடியைப் போன்று
பரிதாப நிலையினிலே உள்ளா ரின்று !
அன்னையவள் அணைத்துப்பால் ஊட்டும் போதே
அன்புதனை ஊட்டியன்று வளர்த்த தாலே
நன்றாக வளர்ந்தார்கள் குடும்பத் தோடு
நல்லொழுக்கம் கற்றார்கள் பெரியா ரோடே !
இன்னமுததைத் தாயூட்ட தாத்தா பாட்டி
இனியகதை வழிப்பண்பை ஊட்டி விட்டார்
ஒன்றிணைந்த குடும்பமாக வாழ்ந்த தாலே
ஒற்றுமையைப் பிறர்க்குதவும் மனத்தைப் பெற்றார் !
கணினிக்குள் தொலைக்காட்சிப் பெட்டிக் குள்ளே
காலத்தைச் செலவழிக்கும் சூழ லாலே
மணியான குழந்தைகளோ கவனிப் பின்றி
மாறியின்று போனார்கள் எந்திர மாக
பிணியானார் ! நேர்மையொடும் சமூகத் தோடும்
பிணைப்பின்றி வளர்ந்தார்கள் பிடிப்பு மின்றி
அணியாக அன்புதனை அணிவித் தால்தான்
ஆல்விழுதாய் வளர்வார்கள் குடும்பம் காப்பர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.