ஒரு முறையாவது!
ஒரு முறையாவது
என்னை நதியாக விடுங்கள்
கழிவுகளைக் கழித்தெனை
சாக்கடையாக்காதீர்கள்!
ஒரு முறையாவது
என்னை மரமாக விடுங்கள்
கோடரிகளால் பிளந்தெனைப்
பிணமாக்காதீர்கள்!
ஒரு முறையாவது
என்னைப் பயிராக
வளரவிடுங்கள்
இரசாயனப் பாலூட்டி
விசமாக்காதீர்கள்!
ஒரு முறையாவது
என்னை வனமாகவிடுங்கள்
கொள்ளிக்கைகளால்
என் சிரசுகளைக் கொளுத்திச்
சாம்பலாக்காதீர்கள்!
ஒரு முறையாவது
என்னை மழையாகப்
பொழிய விடுங்கள்
அமிலப்புகைகளில் என்னை
அமிழ்த்து விடாதீர்கள்!
ஒரு முறையாவது
என்னைப் பட்டமாகப்
பறக்கவிடுங்கள்
தாலி நூலறுத்தெனை
விதவையாக்காதீர்கள்!
ஒரு முறையாவது
என்னை மலராக
மலரவிடுங்கள்
சவ ஊர்வலச் சாலைகளிலென்னைச்
சேர்த்து மிதித்துச்
செல்லாதீர்கள்!
ஒரு முறையாவது
என்னைப் புதையலாகப்
புதைத்து விடுங்கள்
சவக்குழிகளைத்
தோண்டாதீர்கள்!
ஒரு முறையாவது
என்னை இறைவனாக
விடுங்கள்
எந்தமதம் நீயெனும்
கேள்விகளில் என்னைத்
தொலைத்து விடாதீர்கள்!
ஒரு முறையாவது
என்னை மனிதனாக
வாழ விடுங்கள்
வேற்றுக்கிரகவாசியென
வெளியேற்றி விடாதீர்கள்!
- நிலாரவி, கோயம்புத்தூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.