இப்படியும் ஒரு தலைவர்
அருந்தலைவர் காமராசர் தமிழ கத்தின்
ஆட்சியிலே முதல்வராக இருந்த போதோ
உருவத்தைப் போலன்றி உள்ளந் தன்னில்
உள்ளவெள்ளை சட்டைதனை அணிந்த தன்மேல்
பெருமையுடன் துண்டுதனைப் போட்டி ருந்தார் !
பெரும்பாலும் வலப்பக்கம் போடும் துண்டை
ஒருநாளோ இடப்பக்கம் போட்டுக் கொண்டே
ஓரரசு விழாவிற்கு வந்தி ருந்தார் !
வழக்கமான தோற்றத்தில் இருந்தி டாமல்
வலம்இடமாய்த் துண்டுமாறி இருக்கக் கண்டு
பழக்கமான செய்தித்தாள் நிருப ரெல்லாம்
பணிவுடனே காரணத்தைக் கேட்டு நிற்கக்
குழந்தைமனம் கொண்டிருந்த காம ராசர்
கூறவொரு காரணமும் இல்லை யப்பா !
பழசாகிப் போனதாலே கிழிந்த சட்டைப்
பக்கத்தை மறைப்பதற்காய்ப் போட்டே னென்றார் !
கேட்டசெய்தி நிருபரெல்லாம் நெகிழ்ந்து நின்றே
கேடுகெட்ட அரசியலில் இவரைப் போல
வேட்டிசட்டை கிழிந்தாலும் அணிந்து கொள்ளும்
வேறுவொரு முதல்வர்தாம் உண்டோ என்றார் !
நான்ஏழைத் தலைவனென்றே உரைக ளாற்றி
வீட்டுநலன் ஒன்றேதன் குறிக்கோ ளாக
வீதிவலம் வருபவரை எண்ணிப் பார்ப்பீர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.